Sunday, June 9, 2013

பிரபலங்கள் பேட்டி: கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன்! - விஜய் சேதுபதி




'பீட்சா', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' "சூது கவ்வும்' படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு மிகவும் பிசியாகி விட்டார் விஜய் சேதுபதி. 

"ரம்மி', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', "பண்ணையாரும் பத்மினியும்', "சங்கு
தேவன்'......என்று இவர் நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் நட்சத்திர நடிகர்களின் படங்களே வெற்றி பெற திணறும்போது, நீங்கள் நடித்த படங்கள் தொடர் வெற்றி பெற்று வருகின்றனவே...?
என்னைப் பார்க்கும் எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்கும் கேள்வி இதுதான். இந்த வெற்றிக்கு நான் மட்டும் சொந்தக்காரன் என்று ஒரு போதும் நினைக்க மாட்டேன். என்னை திறம்பட நடிக்க வைக்க முடியுமென்று நம்பிய இயக்குநர்கள்தான் இந்த வெற்றிக்கு முதல் காரணமாகவும் முக்கிய சூத்திரதாரியாகவும் இருக்கிறார்கள். "தென்மேற்குப் பருவகாற்று' படத்திலேயே நான் பரவலாக கவனிக்கப்பட்டேன். ஆயினும் இரண்டு வருடங்கள் எனக்கு படமே இல்லை. "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படப்பிடிப்பிற்கு அவ்வப்போது போய் விட்டு வருவேன். ஆரம்பத்தில் அந்தப் படத்தின்மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாமல்தான் நடிக்கவே ஆரம்பித்தேன். ஆனால் போகப் போக ஈடுபாடு ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. வாய்ப்பே இல்லாமல் இருந்தபோது, வந்த நிதானம்தான் அடுத்தடுத்த பயணங்களுக்கான திட்டமிடலைத் தந்தது. ரசிகர்கள் எதிர்பார்ப்பதை ஒவ்வொரு படத்திலும் செய்து முடித்து விட்டால் எந்த ஒரு நடிகராலும் வெற்றிகளைத் தொடர்ந்து கொடுக்க முடியும். இதுவரை வெற்ற வெற்றிகள் பெரிய விஷயமல்ல. இதைப் போலவே இனி வரும் படங்களும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதால் இன்னும் கவனத்துடன் படங்களைத் தேர்வு செய்கிறேன்.



தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தும் பெரிய பேனர், புகழ் பெற்ற இயக்குநர் என்று முயற்சிக்காமல் இன்னமும் அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்கவே ஆர்வமாக இருக்கின்றீர்கள் போலிருக்கிறதே?

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியக் கனவில் இருக்கும் அறிமுக இயக்குநர்கள்தான் நிறைய புதுப்புது விஷயங்களை வைத்திருப்பார்கள். தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறிதான் அவர்களை அப்படி புதிது புதிதாக சிந்திக்க வைக்கும். இப்படிச் சொல்வதால் நான் முன்னணி இயக்குநர்களை குறை கூறுவதாகவோ அவர்களது திறமையை குறைத்து மதிப்பிடுவதாகவோ பொருள் அல்ல. யாராக இருந்தாலும் நான் கதை கேட்காமல் நடிக்க மாட்டேன். என்னுடைய படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணம், கதைதான். இயக்குநர் யாராக இருந்தாலும், கதை அழுத்தமாக இருக்க வேண்டும். நல்ல கதை இருந்தால் மட்டுமே அதை இயக்குநர் சிறப்பாக திரையில் வடிக்க முடியும். சட்டியிலேயே இல்லையென்றால் எங்கிருந்து அகப்பையில் வரும்? என் படங்களுக்கு பெரிய வியாபாரம் கிடையாது. முதல் நாள் ஓப்பனிங்கும் இருக்காது. ஆனால் இதையெல்லாம் தாண்டி நான் நடிக்கும் சினிமா ஜெயிக்கும். பெரிய பேனரா புகழ் பெற்ற இயக்குநரா என்று பார்த்து நான் படங்களை ஒத்துக்கொள்வதில்லை. படத்தின் கதை என்னை சலனப்படுத்த வேண்டும். அதுதான் முக்கியம்.



நீங்கள் நடித்து வெளிவந்த படங்களாகட்டும் அல்லது இப்போது நடித்து வரும் படங்களாகட்டும் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கின்றனவே?

நான் நடித்து வெளியான படங்களின் எப்படி வித்தியாசமாக இருந்ததோ அதைப் போலவே இப்போது நடித்து வரும் படங்களும் வித்தியாசமாகத்தான் இருக்கும். இந்தக் கதைகள் எல்லாம் மாறுபட்ட களன்களைக் கொண்டிருந்தாலும், எனக்கு பிடித்த கதை "ரம்மி'. சுமார் இருபது வருடங்களாக சினிமா துறையில் அனுபவம் பெற்ற பாலகிருஷ்ணன் இயக்குகிறார். "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்ற பாடலின் வரிகள்தான் கதை. நாம ஒரு திசையை நோக்கி பயணிக்க நினைத்தால், வாழ்க்கை நம்மை வேறு ஒரு இடத்துக்கு இழுத்துச் செல்லும். கால வெள்ளத்தில் அடித்துச் செல்கிறபோது நடக்கிற சம்பவங்கள்தான் "ரம்மி'. என்னுடன் இனிகோ பிரபாகர், சூரி இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்கும். பண்ணையாருக்கும் பத்மினி என்ற காருக்கும் இருக்கிற உறவுதான் "பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் கதை. இதில் எனக்கு கார் டிரைவர் கேரக்டர்.



"சங்கு தேவன்' படம் மூலமா தயாரிப்பாளராகவும் களம் இறங்கி விட்டீர்களே...?

நான் என்னுடைய சொந்தப் படத்தைப் போட்டு இந்தப் படத்தைத் தயாரிக்கவில்லை. முதல் பிரதி அடிப்படையில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து ஜேஎஸ்கே புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்துக்காக தயாரிக்க இருக்கிறேன். அப்படத்தில் எனக்கு டிப்பர் லாரி டிரைவர் வேடம். படத்தயாரிப்பில் இருக்கும் நுணுக்கங்களை "சங்குதேவன்' கற்றுத் தரும் என நம்புகிறேன்.



வளர்ந்து வரும் நடிகர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார் யார்?

எனக்கு சிவகார்த்திகேயனை மிகவும் பிடிக்கும். காரணம் அவருடைய டைமிங் சென்ஸ். அவரைப் பார்க்கும் போது இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
சமகாலத்தில் இப்படி ஒரு திறமையன நபர் இருப்பது நல்லதுதான். அப்போதுதானே ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கும். "அட்டக்கத்தி' தினேஷ் நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. உண்மையாகவே அவருக்கு ஆர்வம் அதிகம். இவர்கள் நடித்த படங்களை சமீபத்தில்தான் பார்த்தேன். இன்னும் நிறைய பேரையும் பிடிக்கும்.



அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸ்ல அஜித், விஜய், விக்ரம், சூர்யா மாதிரி சிலர்தான் இருக்காங்க. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதின்னு அடுத்த ரேஸு க்கு சில பேர் வந்துட்டீங்க.. உங்கள் இலக்கு என்ன...?

யாராக இருந்தாலும் ஹிட் முதலிடம் தரும். ஆனால், திறமைதான் நம் காலத்துக்குப் பிறகும் நிற்கும். ஜெயிக்க வேண்டும் என்ற வெறியை விட, என் கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எப்போதும் என் மனதில் நிற்கும். இப்போதுதான் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். எனக்கென்று எந்த ஹிஸ்ட்ரியும் இல்லை. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கனவில்தான் சினிமாவுக்கு வந்தேன். ஹீரோவாகி விட்டேன். இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். போட்டின்னா எனக்கு நானேதான். எனக்கு எந்த ரேஸிலும் சேர்வது பிடிக்காது. சேர்ந்ததும் கிடையாது.


குட்டிப் புலி - விகடன் விமர்சனம்


கராறையே வரலாறாகக்கொண்ட 'குட்டிப் புலி’!

ஊருக்காக உயிரையே கொடுக்கும் சண்டியர் லால், அவரின் லேட்டஸ்ட் வெர்ஷன் மகன் சசிகுமார், மகனைத் திருத்த நினைக்கும் அம்மா சரண்யா, சசியைக் காதலிக்கும் லட்சுமி மேனன், இவர்களைச் சுற்றி முறைப்பும் விறைப்புமான வில்லன்கள். நிறையச் சத்தம், நிறைய யுத்தம்... இதுவே குட்டிப்புலி!

சங்கு அறுக்கும் மற்றுமொரு 'சசிகுமார் ஸ்டைல்’ படம். அதில் அம்மா சென்டிமென்ட் மசாலாவை அழுத்தமாகக் கலக்கி, பெண்களின் பெருமை பேச முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் முத்தையா. ஆனால், படம் நெடுகப் பல காட்சிகள் இதற்கு முன் வந்த பல 'தகராறு’ படங்களைத் தாறுமாறாக நினைவுபடுத்திச் செல்கின்றனவே?

பில்டப் ஓப்பனிங், உச்ச டெஸிபல் ஹீரோயிசம், பஞ்ச் வசனங்கள் என சசிகுமார் 'புதிதாக’ ஒன்றை முயற்சித்திருக்கிறார். ஆனால், யாரை எதற்காக அடிக்கிறார், அவருடைய லட்சியம் என்ன என்று படத்தில் எந்த டீடெய்லும் இல்லாததால், புலியின் உறுமலில் வீரியம் இல்லை. 'லட்சுமி மேனனைக் காதலிக்காதே’ என்று எச்சரிப்பதற்காகத்தான் வில்லன், சசியைக் கூப்பிடுகிறான். ஆனால், அவனைப் பேச விடாமல் வாலன்டியராக வம்பிழுத்து,
அடிதடி நடத்திப் பிரச்னையைப் பெரிதாக்குகிறார் சசிகுமார். இதில் யார் வில்லன்?

கன்னி தோன்றி காதல் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய 'நல்ல ரவுடியைக் காதலிக்கும் அமைதிப் பெண்’ கேரக்டர் லட்சுமி மேனனுக்கு. என்னத்தைச் சொல்ல..?

மகனுக்காக வீடு வீடாகச் சென்று மடிப்பிச்சை எடுப்பது, சசிகுமார் திருமணத்துக்குச் சம்மதித்ததும் சந்தோஷமும் கொண்டாட்டமுமாகத் தோழியிடம் பேசுவது என சரண்யா 'அக்மார்க் அம்மா’வாக அசத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் 'அம்மா’ என்றால் 'அவர்’ நினைவுவருவதுபோல, தமிழ் சினிமாவில் 'அம்மா’ என்றால் சுங்குடிச் சேலையுடன் சரண்யா நினைவுக்கு வருவது... நமக்கும் அவருக்கும் நல்லதா... கெட்டதா? சிவந்த விழிகளும், கலைந்த தலையும், திமுதிமு உடம்புமாக அப்படியே 'அட்டாக் பாண்டி’யை நினைவுபடுத்துகிறார் வில்லன் ராஜசிம்மன்.


வழக்கமாக சசிகுமார் படங்களில் காமெடி பேக்கேஜ் பக்காவாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் வளமான காமெடிக் கும் பஞ்சம். வேலைவெட்டி இல்லாத நான்கு கேரக்டர்கள் வளவளவெனப் பேசிக்கொண்டே இருப்பது... வெயிலில் வெந்நீர் குடிப்பதுபோல வெறி ஏற்றுகிறது! 

வன்முறையால் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வன்முறையை அப்படி வெறுக்கும் சரண்யா, கடைசிக் காட்சியில் அந்த முடிவை எடுக்கும் இடம் மட்டுமே திக்... திடுக்! ஆனால், சசிகுமார் கதாபாத்திரத்தின் மீது நமக்கு அழுத்தமான ஈர்ப்பு இல்லாததால், சரண்யாவின் அந்த முடிவு தேவையான சுரீர் விளைவைக் கொடுக்காமல் வேடிக்கையாக க்ராஸ் செய்கிறது. ஜிப்ரானின் இசையில் 'காத்து காத்து’ மட்டும் கேட்கிற ரகம். ஆனால், படத்தில் பின்னணி இசை தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இளையராஜா மெலடிகளால் நிரப்பியிருப்பது... நியாயமாரே? 
'ஆம்பளை கெட்டா, வாழ்க்கைதான் போச்சு... பொம்பளை கெட்டா, வம்சமே போச்சு!’, 'நீ ஆம்பளைனு நிரூபிக்கவும் ஒரு பொம்பளைதாண்டா வேணும்!’ - டைரக்டர் சார்... நாம எந்த ஜெனரேஷன்ல இருக்கோம்? பெண்கள் விண்வெளிக்கும், நீர்மூழ்கிக் கப்பல் பணிக்கும் செல்லும் ஜெனரேஷன் இது! இந்தக் காலத்தில் இப்படியரு பிற்போக்குப் பார்வை தேவைதானா?

சாதி அடையாளங்கள் இல்லாமல் பார்த்தாலே, ஒவ்வோர் அம்மாவும் தன் பிள்ளைகளைக் காக்கும் வீராங்கனைதான். ஆனால், படத்தின் பல காட்சிகள் ஒரு குறிப்பிட்ட சாதிப் பெருமையையும் வீரத்தையுமே தூக்கிப் பிடிக்கிறதே... ஏன் சார்?

குண்டுச்சட்டியில் குதிரைக்குப் பதில்... புலி !

Saturday, June 8, 2013

RAANJHANAA- ராஞ்ச்ஹனா - தனுஷ்



தனுஷ் இந்தி திரை உலகில் கால் பதிக்கும் திரைப்படம் ராஞ்ச்ஹனா
காதலை மையமாக கொண்ட இந்த திரைப்படத்தை ஆனந்த L ராஜ் இயக்கியுள்ளார்.
ரஹ்மான் இசையமைத்து உள்ள இத்திரைப்பட பாடல்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
திரைப்படம் எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாக உள்ளது.

download songs here